கேள்வி: உங்கள் பார்வையில், எழுத்துக்கென்று விசேஷ முக்கியத்துவம், அந்தஸ்து
எதுவும் கிடையாது என்று ஆகிறது. அதாவது ஒருவன் எழுத்தாளனாக இருப்பதும்,
இன்னொருத்தன் ஆட்டோ டிரைவராக இருப்பதும் எல்லாம் ஒன்றுதான் என்பதாக...
அசோகமித்திரன்: எக்ஸாட்லி. அதேதான். அவரவர்கள் வேலையில் அவர்கள்
உன்னதத்தை அடைகிறார்கள். எனக்கு தெரிந்தது எழுதுவது.
***** ***** *****
கேள்வி: இப்போது ஓங்கியுள்ள இந்துத்துவக் குரல் பற்றி உங்கள் எண்ணம் என்ன?
சாகித்ய அகாடமி தலைவராய் இருந்த கன்னட இலக்கியகர்த்தா யூ.ஆர். அனந்தமூர்த்தி:
மதத்தின் உயர்ந்த வடிவமே ஆன்மீகம். ஆன்மீகம் தன்வயப்பட்டது. ரமணரும், ராமகி
ருஷ்ணரும் மதவாதிகள் அல்ல. ஆன்மீக முனிவர்கள். இந்துத்துவம் என்பதற்கும் இந்த
ஆன்மீகத்திற்கும் சம்பந்தமேயில்லை. ஆழமாக மதத்தில் ஈடுபட்டவன் மதவாதியாக இருக்க
மாட்டான். அத்வானி போன்றவர்களின் எண்னமெல்லாம் இந்தியாவை இஸ்ரேல்
ஆக்குவதுதான். இஸ்ரேல் நமக்கு முன்னுதாரணம் அல்ல.
***** ***** *****
கேள்வி: உங்களை வெளி உலகுக்கு பிரபலப்படுத்திய "கடல்புரத்தில்" அச்சில்
வந்தபோது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?
வண்ணநிலவன்: என்னைப் பொறுத்தவரை எதுவுமே பாதிக்கல எனக்கு. எல்லாமே ரொம்ம சாதாரணமா செஞ்சா எல்லாரும் இப்படி பிரமாதமா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் எனக்கு ரொம்ப ஆச்சரியம் ஏற்பட்டது. மகிழ்சியோ,
கர்வமோ, அகந்தையோ எனக்கு ஏற்படல.
கேள்வி: இது தன்னடக்கமா?
வண்ணநிலவன்: நல்ல எழுத்து எது என்பது எனக்குத் தெரியும். என்னைவிட பிரமாதமாய் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
***** ***** *****
கேள்வி: இன்றைய கவிதைச் சூழலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வண்ணதாசன்: இப்ப யாரு கவிதை எழுதறாங்க? ரொம்ப கொறைஞ்சி போச்சி. கொஞ்சம் மாறுதலா எழுதறவங்கன்னு யுவனை சொல்லலாம். வெங்கடேசனை சொல்லலாம். மனுஷ்ய புத்திரனை எல்லாரும் பாராட்டுறாங்க. ஆனா மனுஷ்ய புத்திரன் என்னை இம்ப்ரஸ் பண்ணல. அவருடைய சில அபிப்ராயங்கள் கட்டுரைகள் எனக்கு பிடிச்சிருக்கு. கவிதைகள் எனக்கு பிடிக்கல. அவரைப் பத்தி ரொம்ப ஜாஸ்தியா
சொல்றாங்களோன்னு நெனக்கிறேன். இது பின்னாடி அவரை பாதிச்சிடுமோன்னு நெனக்கிறேன். 'கழிவறையில் 90 நிமிடங்கள்' கவிதை எனக்குப் பிடிச்சிருக்கு. 'அம்மா இல்லாத ரம்ஜான்' கவிதையை திரும்பத் திரும்ப எல்லாரும் சொல்றாங்க. என்னை அது
இம்ப்ரஸ் பண்ணல. வெங்கடேசனிடம் க.நா.சு.வின் பாதிப்பு இருக்கு. இருந்தாலும் அவரின் குரலை கவனத்தில் எடுத்துக் கொள்ளணும்னு நெனக்கிறேன். பூமா ஈஸ்வரமூர்த்தில்லாம் எழுதறத விட்டுட்டாரு.
கவிதைச் சூழல் நீர்த்துப் போனதற்கு வணிகப் பத்திரிகைகள்தான் காரணம். தினமலர் வாரமலரில் 'கவிதைச் சோலை' போட்டபோதெ கவிதை பலவீனப்பட்டு விட்டது. எல்லோருக்கும் அனுபவம் பொதுவா பரம்பரை பரம்பரையாக கொறைஞ்சிக்கிட்டே வருது.
ஸ்கூல் டேஸைப் பத்தி ஒரு கவிதை எழுதிடறாங்க. இல்லேன்னா ஒரு குறுநாவல் எழுதிடறாங்க. அப்புறம் அப்பா, அம்மா, தாத்தா பத்தி உறவினர்களைப் பத்தி. பழமலை போன்றவர்கள் வந்த பிறகு, அந்த மாதிரி ஒரு ட்ரெண்ட்.
கேள்வி: பழமல எழுதுவதை நீங்கள் கவிதையாக ஏற்றுக் கொள்வீர்களா?
வண்ணதாசன்: 'குரோட்டன்ஸ்களோடு கொஞ்ச நேரம்' ஒரு தரம் படித்தேன். அதைப்பத்தி நான் யாருக்கிட்டேயும் சொல்லல. நமக்குப் பிடிச்சிருந்தா நண்பர்களிடம் சொல்வோம்லியா. அப்படி யார்கிட்டேயும் சொல்லத் தோணல. அவர் கவி
தையை விடவும் கவிதைக்குப்பின் செய்யும் காரியம் பிடிச்சிருக்கு.
***** ***** *****
கேள்வி: பிராமணர் - பிராமணர் அல்லாதார் கோஷம் ஒரு காலம் கடந்த கோஷம் என்ற கருத்து பற்றி என்ன நினைக்கறீங்க?
பிரபஞ்சன்: இது காலம் கடந்த கோஷம் என்று நான் நினைக்கல்லே. இது இரண்டாயிரம் வருசமா இன்று வரையிலும் இருக்கு. பிராமணக் கருத்தோட்டம் சார்ந்த இலக்கியங்களூம் அதை எதிர்த்துக் கலகம் செய்யக்கூடிய தலிக் இலக்கியமும் இங்க இருந்துக்கிட்டு இருக்கு. இந்தியப் பாரம்பரியத்துல புத்தர்தான் இந்தக் கலகத்தை முதன்முதல் ஆரம்பித்தவர். வேதத்தை எதிர்த்த முதல் குரலாக அவருடையது இருந்தது. இங்க தமிழகத்தில் திருமூலர்ல இருந்து இந்தக் கிளர்ச்சி ஆரம்பமாகுது.
கேள்வி: இந்த வேதம் என்பதே பிராம்மணர்களோடு சம்பந்தப்பட்டது. இந்து தர்மத்துக்கு சம்பந்தப்பட்ட சாஸ்திரம் அல்ல என்று நினைக்கிறீர்களா?
பிரபஞ்சன்: இந்து தர்மம் என்பதையே நான் பிராமணீய தர்மமாகத்தான் பார்க்கிறேன். இந்து தர்மம் என்பது மனிதர்களைப் பிரித்த ஒரு தர்மமாக எனக்குப் படுகிறது. அதோடு மட்டுமல்ல இந்து தர்மம் என்றோ கிறிஸ்துவ தர்மம் என்றோ இஸ்லாமிய தர்மம் என்றோ
ஒன்று இருக்க முடியாது. மனித தர்மம் ஒன்றுதான் இருக்க முடியும்.
***** ***** *****
கேள்வி: .... ...... சில பெயர் சொற்களை வினைச்சொற்களாக மாத்தி எழுதற உத்தியைக் கையாண்டீங்க. 'புன்னகைத்தான்' என்று எழுதுவது, சவரம் செய்து கொண்டான் என்பதை 'சவரித்துக் கொண்டான்' என்று எழுதுவது. இதுமாதிரி எழுதுவது
தமிழ் மொழிக்கு நீங்க செய்த நியாயம் என்று சொல்வதா? துரோகம் என்று சொல்வதா?
சுஜாதா: ஆழ்வார் செய்திருக்கிறார் சார்! 'காண்கின்றனர்களும் கேட்கின்றனர்களும்' என்று எழுதி இருக்கார். காண்கின்றனர் என்பதே பன்மை. அப்புறம் 'கள்' விகுதி சேர்த்திருக்கிறார்.
கேள்வி: அப்படியே நீங்க போனீங்கன்னா என்ன ஆகும் தெரியுமா? 'காலையில் அவன் மேஜையில் உட்கார்ந்து இட்லித்து விட்டு, சாம்பாரித்துவிட்டு, ஆபிசினான்' என்று எழுதினா சரியாக இருக்குமா?
சுஜாதா: (சிரித்துக் கொண்டே) அதை நான் வேண்டுமென்றே செய்வதில்லை. இதுமாதிரி பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாத்தி எழுதறது பற்றி நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அந்த வார்த்தைகள் சரியா இல்லைனா செத்துப் போயிடும்.
Euphony-ன்னு சொல்வாங்க. காது ஓசைக்கு சரியா இல்லைன்னா தூக்கி எறிஞ்சிடுவாங்க. "அந்த வார்த்தைக்கு ஒரு மரியாதை இருக்கு. கற்பு இருக்கு. தவறுதலாகப் பயன்படுத்தக் கூடாது. தமிழ் மொழியை மீறக்கூடாது" அப்படி என்றெல்லாம் எடுத்துக்
கொள்ள வேண்டியதில்லை.
கேள்வி: பாலகுமாரன் தன்னுடைய எழுத்துக்கள் நூறு வருஷம் வாழும்னு சொல்றாரு. உங்க எழுத்துக்கள்...?
சுஜாதா: நூறு வருஷத்துக்கு தமிழே இருக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற நிலைதான். காலத்தால் சாகாத இலக்கி யம் படைப்பது இந்த மாதிரி தொடர்களில் எனக்கு நம்பிக்கையில்லை.
***** ***** *****
கேள்வி: எப்படி எழுத வேண்டும் என்று எங்கே கற்றுக் கொண்டீர்கள்?
பாலகுமாரன்: தி.ஜானகிராமனிடம் கற்றுக் கொண்டேன். சுஜாதா சொல்ல புரிந்து கொண்டேன்.
கேள்வி: ஜானகிராமனுடைய எழுத்தில் உள்ள கலைத்தன்மை (Litarary Art) நீங்கள் கற்றுக் கொண்டதாக நினைக்கிறீர்களா?
பாலகுமாரன்: நான் அவரிடமிருந்து நீங்கள் சொல்லுகிற கலைத்தன்மையைக் கற்றுக் கொண்டதோடு சில இடங்களில் அவரையும் விட அழகாகவே கையாண்டிருக்கிறேன் என்பது என் அபிப்ராயம். ஏனென்றால் ஜானகிராமனிடம் எனக்கு ஒப்புமை இல்லாத
இடங்களும் உண்டு.
***** ***** *****
கேள்வி: பத்திரிகைகள் எப்படி இருக்க வேண்டும்?
இந்து என். ராம்: மூன்று விஷயங்கள் ஒரு பத்திரிகைக்குத் தேவை என நினைக்கிறேன். 1. நம்பகத்தன்மை, 2. செய்திகளின் பின்புலத்தில் உள்ள விஷயங்களை அலசுவதும் அந்த செய்தி பற்றி அந்த பத்திரிகையின் கணிப்பும், 3. அதை அமைப்பதில் (lay out) உள்ள அழகுத்தன்மை.
***** ***** *****
கேள்வி: ஜே.ஜே. சில குறிப்புகள் போன்ற நாவல்களைப் பற்றி உங்கள் விமரிசனம்...
சு.சமுத்திரம்: இப்பவும் சொல்கிறேன். அந்த நாவல் ஒரு பேத்தல். வேணுமின்னு டமாரம் அடிக்கிற நாவல். நாவலைப் படிச்சபிறகு ஒரு தாக்கம் இருக்கணும். ஜேஜே இரண்டு தரம் படிச்சேன். எனக்குப் புரியல்லே.
***** ***** *****
கேள்வி: 'ஜே.ஜே. சில குறிப்புகள்' போல் 'தேரோடும் வீதி' ஏன் வெற்றி பெற முடியவில்லை.
நீல. பத்மநாபன்: ஜே.ஜே. சில குறிப்புகளை நான் மட்டுமல்ல. க.நா.சு.வோ நகுலனோ ஒரு வெற்றிப் படைப்பாக எண்ணவில்லை. தப்போ சரியோ ஸி.ஜே.தாமஸ் போன்ற மலையாள எழுத்தாளர்களின் பெயர்களை மாற்றி, தமிழ்நாட்டு வேஷத்தில் உலவவிட்டிருப்பதாய் ஒரு வதந்தி பரவியிருந்தும் கூட, இந்நாவலை தமிழில் 'பசுவய்யா'வைப் போலவோ, அதைவிடவோ மலையாளத்தில் பிரபலமான ஆற்றூர் ரவி
வர்மா என்ற கவிஞன், தம் கவிமொழியில், தமிழ்நடையின் கம்பீரம் குலையாமல் மலையாளத்தில் மொழிபெயர்த்து 'மாத்ரூ பூமி' வார இதழில் தொடராக வெளியிட்டும், அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில சிந்தனைக் கீற்றுகள், கடைசியி
ல் கெட்டிக்காரத்தனமாய் இட்டுக் கட்டி சேர்த்திருக்கும் கால விவரணப் பட்டியல் இவைகளை விட்டால், ஒரு கலைப்படைப்பு என்ற முறையில் எந்தவிதத்தில் இந்நாவல் வெற்றி பெற்றிருக்கிறதோ?
தேரோடும் வீதியைப் பொறுத்தவரை இன்று காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுப்பப்பட்டிருக்கும் புழுதிப் படலங்கள் அமுங்கிய பின்னர், என் முந்தைய நாவல்களைப் போல் இந்நாவலையும் கலை உலகம் ஏற்றுக் கொள்ளும் என்பதே என் நம்பிக்கை.
***** ***** *****
கேள்வி: நமது சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ன என்று நினைக்கிறீர்கள்?
சோ ராமசாமி: நர்ஸ், டீச்சர் இந்த வேலைகள்தான் பெண்களுக்கு ஏற்றவை என்று நினைக்கிறேன். வீட்டைக் கவனிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். பிள்ளைகளைக் கவனிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். கணவனின் சம்பாத்தியம் போதாத நிலையிலுள்ள
குடும்பங்களில் பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது. அது போன்ற குடும்பங்களில் குழந்தைகளை கவனித்துக் கொள்கிற விஷயத்தில், ஆணைவிடப் பெண்ணே ரொம்பப் பொருத்தமானவள்
**** ***** *****
நன்றி: சுபமங்களா நேர்காணல்கள் (கலைஞர் முதல் கலாப்ரியா வரை) - வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை -17